கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் குலுக்கல்லூரைச் சேர்ந்தவர் சைனபா என்பவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த நபர் சைனபாவின் பேத்தியின் கழுத்திலிருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் 5 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனதை அறிந்த மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர் . மேலும் சைனபா வீட்டின் அருகில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது வீட்டின் ஓட்டை பிரித்து நகைகளை திருடியது சைனபாவின் முன்னாள் கணவர் அப்பாஸ் என்பது தெரியவந்தது. திருட்டு சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து அப்பாஸை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். சைனாபாவும் அப்பாஸும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.