கம்பம்மெட்டு மலை அடிவார பகுதியில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கரிச்சிப்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டத்திற்கு தொழிலாளர்களை சவாரிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மாணிக்காபுரத்தை சேர்ந்த பெண் தோட்டத் தொழிலாளர்களை அழைத்து கொண்டு ஏலக்காய் தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வேலையை முடிந்ததும் தொழிலாளர்களுடன் மாணிக்ககாபுரத்திற்கு திரும்பியுள்ளார்.
அப்போது கம்பம்மெட்டு மலை அடிவாரப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் டிரைவர் சென்ராயன் உள்பட ஜீப்பில் இருந்த 5 பெண் தொழிலாளர்களும் படுகாயமடைந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு கம்பம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.