Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு” அலைமோதிய பொதுமக்களின் கூட்டம்…. நடைபெறும் கண்காணிப்பு பணி….!!

தீபாவளியை முன்னிட்டு புது ஆடைகள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் பிரதான சாலை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது.

தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி நகரில் ஜவுளிகள் மற்றும் நகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் நகரிலுள்ள அனைத்து சாலைகளிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அதாவது தர்மபுரி நகரில் உள்ள சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, சித்த வீரப்ப செட்டி தெரு, துரைசாமி கவுண்டர் தெரு, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு கடையிலும் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதன் காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது மட்டுமின்றி தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனையும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் திறந்துள்ளதை அடுத்து அதை வாங்குவதற்காக பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். மேலும் இனிப்பு மற்றும் காரம் விற்பனை செய்யும் கடைகள், பேக்கரி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகைக் கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இவ்வாறு பொதுமக்களின் கூட்டம் அலைமோதுவதால் பிரதான சாலைகள் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி இருக்கின்றது.

அதன்படி சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, சித்த வீரப்ப செட்டி தெரு உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்களின் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு சாலைகளில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் பெரும்பாலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |