பிரிவினை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாது என்று தற்போது தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளாகும். இதில் பிரிக்கப்பட்ட மாநிலங்களை பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது. கர்நாடகாவில் இதனை ராஜ்யோத்சவா நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் கர்நாடகாவில் இதற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாக இந்த நாள் கொண்டாடப் படவில்லை. ஆனால் சமீப ஆண்டுகாலமாக இந்த நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இருப்பினும் தமிழ்நாடு என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை வைத்து தற்போது பல வாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பாஜக, பாமக ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறந்தநாளை தான் பிறந்த நாளாக கொண்டாட வேண்டுமே தவிர, குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘பிறப்பை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாதா? தற்போது தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி தேவையா? பிறப்பிலும் பெயர் வைப்பதிலும் என்ன இருக்கின்றது பெருமை, தமிழ்நாட்டை பார் புகழ செய்வதே பெருமை. தாய் தமிழகத்தை நாட்டுக்கு முன்மாதிரி மாநிலமாக அமைத்து சென்ற வள்ளல்கள் தனியாக நாளும் கேட்கவில்லை , தனித்தமிழ்நாடு கேட்கவில்லை. அரசியல் ஆதாயம் தேட இவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் இவை’ என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்துக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் முகநூல் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.