சர்வதேச சைவ தினம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
வருடந்தோறும் உலக சைவ தினம் நவம்பர் முதல் தேதியன்று உலகம் முழுக்க இருக்கும் சைவ பிரியர்களால் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, இந்த தினமானது முட்டை, இறைச்சி போன்றவற்றை மட்டும் தவிர்க்க கூடிய சைவ பிரியர்களுக்கு கிடையாது. பால், தயிர், பன்னீர் உட்பட விலங்குகள் மூலம் பெறப்படும் அனைத்து உணவுகளையும் மொத்தமாக தவிர்த்து முழுமையான பச்சை உணவுகளை மட்டும் உண்ணக்கூடிய சைவர்களுக்குரியது.
கடந்த 1944 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் சைவ சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் பின்பு, கடந்த 1994 ஆம் வருடத்தில் இச்சங்கத்தின் 50வது வருட பொன்விழா நவம்பர் முதல் தேதியன்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதனைக் குறிப்பிடும் விதத்தில் தான் ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் தேதியன்று உலக சைவ தினம் கொண்டாடப்படுகிறது.
சைவ உணவுகளை மட்டுமே உண்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சைவ வாழ்க்கை முறையானது, மனிதர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி, விலங்குகளையும் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவி புரிகிறது.