மாநிலம் பிறந்த நாளை விட்டுவிட்டு பெயர் சூட்டப்பட்ட நாளை கொண்டாடுவது பொருத்தமற்றது. வரலாற்றை மாற்ற முயற்சிக்காதீர்கள் என்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு நாள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளாக சென்னை மாகாணம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் தமிழ்நாடு நாள் என சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முன்னாள் முதல்வர் கே பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற திமுக கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்தினை தெரிவித்து வந்தது.
அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் ‘மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1 ஆம் நாளில் நாம் தமிழ் மொழி இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் மீட்டு எடுப்போம் ‘ என்று உறுதி கூறினார். ஆனால் அக்டோபர் 30-ஆம் தேதி மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 18-ஆம் தேதி இனி ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, இதற்கான அரசாணையும் வெளியிட்டார். நவம்பர் 1ஆம் தேதி தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவது பொருத்தமாக இருக்கும்.
ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள். இந்த நாளை தமிழ்நாடு நாள் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. எனவே முதல்வர் தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காமல், நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பது தான் உகந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்றுதான் தமிழ்நாடு நாள் தமிழகத்தில் வாழும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.