ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளி நிர்வாகம் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் யானை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிவகங்கையில் அமைந்துள்ள கல்வி மாவட்டங்கள் சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை ஆகியவை ஆகும். இங்கு அமைந்துள்ள 85 துவக்க பள்ளியில் 15000 மாணவர்கள் படித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளை வரவேற்க குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து யானை சுப்புலட்சுமியை அழைத்து வந்து தும்பிக்கையால் மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர். யானையுடன் வந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் மாணவர்களை முகமலர வரவேற்றார். மேலும் மாணவர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் மாணவ, மாணவிகளை வரவேற்க உள்ளனர். பள்ளியின் முதல் 15 நாட்கள் மாணவர்களை மகிழ்விக்க நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உடன் கதை, பாடல், விளையாட்டு, ஓவியம், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையானது 15 நாட்களுக்கு பிறகு 40 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.