திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கவனம் திரும்பியதுதான் திரும்பியது, எங்கு திரும்பினாலும் ஒரே திருவள்ளுவர் மயம்தான். திருவள்ளுவர் உயிருடன் இருந்தால் ‘இத்தன நாள் நீங்கலாம் எங்கடா இருந்தீங்க?’ என்று வடிவேலு கணக்காக கேட்கின்ற அளவுக்கு நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அவர் மீது அன்பை வாரி இரைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு அசத்தியுள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அது என்ன என்றால், திருவள்ளுவர் சர்ச்சைக்குத் தொடக்கப்புள்ளி வைத்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் என்பவர், ’திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் அனைத்து இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும். ராஜேந்திர பாலாஜியின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்’ என்ற கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்தார்.
இதனை கவனித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆஹா இதுவும் நல்ல ஐடியாவாத்தானே இருக்கு, இத்தனை நாள் நமக்கு ஏன் தோன்றாமல் போச்சு என்று நினைத்தாரோ என்னவோ, உடனடியாக பதில் ட்வீட் செய்து அசத்திவிட்டார். அந்த பதிலில், ‘மிக விரைவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலைப் பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆவின் பால் பாக்கெட்டுகளில் எப்போது திருக்குறளைக் காணப்போகின்றோம் என்ற ஆர்வத்தில் தாய்மார்கள் காத்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS
— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019