வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் வினாடிக்கு 1,369 கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
அதனடிப்படையில் சுமார் 70 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 62 அடியை எட்டியுள்ளது. மேலும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் இன்னும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தேனி ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற 5 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.