ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியின் காதை அறுத்து வாலிபர்கள் கம்மலை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரியம்பாளையம் கிராமத்தில் சின்னசாமி மனைவி செல்லம்மாள் வசித்து வருகின்றார். இதில் செல்லம்மாள் ஆடுகள் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் செல்லம்மாள் காஞ்சிக்கோவில் செல்லும் ரோட்டோரம் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்லம்மாளிடம் சென்று குடிப்பதற்கு தண்ணீர் இருந்தால் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் செல்லம்மாள் தான் வைத்து இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாலிபர்களிடம் கொடுத்துள்ளார். அவ்வேளையில் தண்ணீர் கேட்ட வாலிபர்கள் திடீரென செல்லம்மாளை பிடித்துக் கொண்டு அவருடைய ஒரு காதில் இருந்த தங்க கம்மலை கழட்டியுள்ளனர்.
அப்போது செல்லம்மாள் அலறல் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து உஷாரான வாலிபர்கள் செல்லம்மாளின் மற்றொரு காதை தங்களிடம் இருந்த கத்தியால் அறுத்து 2-வது கம்மலையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இந்நிலையில் செல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதன்பின் அவர்கள் செல்லம்மாளை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு செல்லம்மாளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் கம்மலை பறித்து சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.