நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் மாவட்ட ஆட்சியர் உள்பட அரசு அதிகாரிக மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பள்ளிபாளையத்தில் ராசப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் இருப்பதாக பரமத்திவேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து ராசப்பன் பட்டாவில் இருக்கும் கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி ராசப்பன் பெயரில் தனிப்பட்டாவாக வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ராசப்பன் பட்டாவில் இருக்கும் கோவில் சாமிகளின் பெயர்களை நீக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீண்டும் ராசப்பன் சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபாகரன் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன் ராஜ் ஆகியோர் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.