கனமழையின் காரணமாக மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக பெய்த தொடர் மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் சூழ்ந்து நிற்கின்றது. இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதிய வடிகால் வசதி இல்லாமல் இருக்கிறது. மேலும் வடிகால்கள் உள்ள இடங்களில் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சாக்கடை நீரும், மழை நீரும் கலந்து நிற்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன போக்குவரத்து பயனற்ற நிலையில் இருக்கின்றது.
இதன் காரணமாக தீபாவளி பொருட்கள் வாங்க வந்த மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆகவே மழைநீர் தேங்காதவாறு வடிகால்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த தொடர் மழையினால் அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் ஊசி போடும் இடம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தாய்-சேய் நல மருத்துவமனை என்பதால் அதிகமாக பிரசவங்கள் நடைபெறும் நிலையில் கர்ப்பிணிகள் கடும் இடையூறை அனுபவித்து வருகின்றனர்.