மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், வள்ளியூர், முக்கூடல் ஆகிய இடங்களில் கால்நடை சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மேலப்பாளையம் சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறும். இங்கு ஆடுகள் மட்டுமல்லாது மாடு, கோழி, கருவாடு ஆகியவையும் விற்பனைக்கு வரும். இதனை ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாங்கவும் விற்கவும் வந்து செல்வார்கள். மேலும் பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மேலப்பாளையம் சந்தைகளில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று சந்தையில் விற்பனை அதிகரித்தது.
இதனால் இரவு முதல் ஏராளமான வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதனால் சந்தையில் வியாபாரிகள்,பொதுமக்கள் என சுமார் 4000 பேர் அங்கு திரண்டனர். இதனையடுத்து 1500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று கோழிகளும் அதிகமாக விற்பனையானது. மேலும் கொரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு சந்தையின் வாசலில் சானிடைசர் வைக்கப்பட்டது. மேலும் முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மைக் கொண்டு கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.