சொத்து தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தில் ஆறுமுகம் என்ற புலிப்பாண்டி வசித்து வருகின்றார். இவருக்கு முனியசாமி, முருகன் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் முனியசாமிக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இவர்களில் முருகன் கூலி வேலை செய்து வந்தார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் முருகன் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலோன் காலனியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டு மாமனார் ஊரில் தங்கி வந்தார். இந்நிலையில் முருகன் தனது தந்தையின் உதவியுடன் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கினார்.
அதனை தந்தையிடம் காண்பிக்க முருகன் தன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கு தந்தை புலிப்பாண்டியிடம் மோட்டார் சைக்கிளை காட்டிவிட்டு முருகன் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அப்பகுதியில் கனமழை பெய்ததால் தந்தையின் வீட்டிலேயே முருகன் தங்கினார். இதனையடுத்து முருகன் மற்றும் அவரது அண்ணன் முனிசாமி இருவரும் தனித்தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் எழுந்த முனியசாமி திடீரென முருகனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது.
இதனால் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் சித்ரகலா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் முனியசாமி தாமாகவே காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.