ராஜினாமா கடிதம் கேட்ட முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி கடைவீதி அருகில் தனியார் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் முதல்வர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கும் 8 ஆசிரியர்களிடம் பேசியுள்ளார். அதாவது ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு 8 ரூபாய் சம்பளத்தில் மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ளுமாறு முதல்வர் ஆசிரியர்களை வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு முதல்வர் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசி அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து ராஜினாமா கடிதம் கேட்கப்பட்ட 5 ஆசிரியர்கள் பள்ளியின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த ஆசிரியர்கள் பள்ளியின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தங்களை ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு குறைந்த சம்பளத்தில் பணியில் சேர கட்டாயப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனை கைவிடாவிட்டால் பள்ளியின் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது ஆசிரியர்களின் கற்பித்தல் தகுதியை மேம்படுத்தி நிரூபிக்க 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சம்பளத்தை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.