சென்னை மாநகராட்சியில் பள்ளமாக உள்ள சாலைகளை சரி செய்வதற்கு ரூபாய் 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5,500 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர மீட்டர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சாலைகள் சரி செய்யும் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 10 லட்சம் வீதம் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனை வைத்து உடனடியாக சாலைகளை சீர் செய்யும் பணிகளை முடித்து, அந்தந்த மண்டலத்தை சேர்ந்த அதிகாரிகள் மாநகராட்சிக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.