இங்கிலாந்து பருவநிலை மாநாட்டில், 2030 ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய 26 ஆவது பருவநிலை மாநாடு வருகிற 12 ஆம் தேதிவரை நடக்க உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா உட்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் நியூயார்க்கில் கடந்த 2016 இல் கையெழுத்திடப்பட்ட பாரீஸ் ஒப்பந்தப்படி, “புவியின் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில், இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் ஏற்பாட்டில் நேற்று வனம் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கனடா, ரஷியா, பிரேசில், கொலம்பியா, இந்தோனேஷியா, காங்கோ உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும், உலகளவில் 85 சதவீத காடுகள், மேற்குறிப்பிட்ட நாடுகளில்தான் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் உறுதி எடுத்தனர். தற்போது, இது தொடர்பான அதிகாரப்பூரவ பிரகடனம் வெளியிடப்பட்டது.