அமெரிக்காவில் தனது மகளின் காதலனை கொன்று கார் டிக்கிக்குள் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Spokane நகரை சேர்ந்தவர் ஜான் இசென்மன்(60). இவரின் மகள் அரோன் சோரன்சன் (19) என்ற இளைஞரை காதலித்து வந்தார். ஆனால் அரோன் சோரன்சன் பணத்திற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தனது காதலியை சியாட் நகரில் உள்ள பாலியல் தொழில் கும்பலிடம் 1,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்தார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஜான், சியாட்டல் சென்று தனது மகளை பத்திரமாக மீட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ஜான் அரோன் சோரன்சனை கடந்தாண்டு நவம்பர் மாதம் ஸ்போகெனி நகரின் காட்டுப்பகுதிக்குள் காரில் கடத்தி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரோனை குத்தியும், கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார். பின்னர், அரோன் உடலை கார் டிக்கிக்குள் வைத்து ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திவிட்டு ஜான் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பல மாதங்களாக நின்று கொண்டிருந்த காரை கடந்த மாதம் இளைஞர்கள் ஆய்வு செய்த போது, மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எலும்புக்கூடு அரோன் சோரன்சனின் உடல் என்பது தெரியவந்த நிலையில் ஜான் தாமாகவே போலீசில் சரண் அடைந்தார்.
இதன் பின் போலீசார் ஜானை விசாரித்தபோது, தனது மகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்த ஆத்திரத்தில் அரோனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட அரோனின் உடல் ஓராண்டுக்கு பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஸ்போகெனி நகரில் உள்ள சிறைச்சாலையில் ஜான் அடைக்கப்பட்டுள்ளார்.