ஓடும் பேருந்தில் 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்தில் சேலத்திலிருந்து கடலூரில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் இரண்டு பெண்கள் பேருந்தில் ஏறி அருணா தேவியின் இருக்கை அருகாமையில் அமர்ந்துள்ளனர்.
அப்போது கையில் இருந்த சில்லரையை கீழே போட்டு அதை எடுத்து தருமாறு அருணாதேவியிடம் பெண் ஒருவர் கூறியுள்ளார். பின்னர் அவர் அதை எடுக்கும் போது மற்றொரு பெண் அருணாதேவியின் கையில் வைத்திருந்த பையிலிருந்த 14 பவுன் தங்க நகைகளை திருடி உள்ளனர். இதனை அடுத்து அந்த இரண்டு பெண்களும் பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்றுள்ளனர்.
இதனை அறியாமல் இருந்த அருணாதேவி தனது நிறுத்தம் வந்தவுடன் கீழே இறங்கி கையில் வைத்திருந்த பையை பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அருணாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.