தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிதம்பராபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேகா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முருகன் தன்னுடைய மகள் மருமகனை தலை தீபாவளி கொண்டாடுவதற்காக அழைத்திருந்தார். அதன்படி லேகா மற்றும் அவருடைய கணவர் பரமேஸ்வரன் ஆகியோர் களக்காடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அங்கிருந்து லேகாவின் தந்தை முருகன், தம்பி பரத் ஆகியோர் ஆட்டோவில் சிதம்பராபுரத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் களக்காடு சிதம்பராபுரம் சாலையில் நாங்குநேரியான் கால்வாயின் குறுக்கே தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
இதனால் ஆட்டோவிலிருந்து இறங்கிய 4 பேரும் தரைமட்ட பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 4 பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் வெள்ளத்தில் தத்தளித்த லேகாவின் கணவர் பரமேஸ்வரன், தந்தை முருகன், தம்பி பரத் ஆகிய 3 பேரும் நீச்சல் அடித்து சிறிது தூரத்தில் கரை வந்து சேர்ந்தனர். ஆனால் லேகாவை மட்டும் மீட்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்து அடித்து சென்ற லேகாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சிந்து, நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினர். மேலும் பலத்த மழையின் காரணமாக களக்காடு சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.