தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணையில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறக்கப்பட்டதால் குண்டேரிபள்ளம் அணையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாணிபுத்தூர், வினோபா நகர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.