திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையானது லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. அதேபோல் முதற்கட்டமாக பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் அடுத்ததாக குறைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டர் ரூ.10 குறைத்து நேற்று முன் தினம் உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் கலால் வரியைக் குறைத்ததன் மூலம் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் பயம் நிலவியது. இந்த சூழலில் வரவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்காது என தகவல்கள் கிடைத்தன. அதை தொடர்ந்தே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, பெயரளவில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 விலை குறைப்பு செய்த திமுகவின் விடியா அரசே! தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இன்னும் மீதமுள்ள பெட்ரோலுக்கு ரூ. 2 மற்றும் டீசலுக்கு ரூ. 4 விலை குறைப்பை முழுமையாக நிறைவேற்றுவது எப்பொழுது? என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.