கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகிலுள்ள முதலிபாளையத்தில் சிவகுமார்(37) என்பவர் வசித்து வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி(30) மற்றும் பிரணவ்(7), சாய்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தீபாவளி பண்டிகைக்காக குன்னத்தூர் பகுதியில் உள்ள ரம்யாவின் தாய் வீட்டிற்கு பைக்கில் சென்றார்.
அப்போது சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் டோல் கேட் அருகில் சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது திடீரென பைக் மோதியது. இதனால் சிவகுமாரின் மகன் பிரணவ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது மனைவி மற்றும் மகன் சாய் ஆகிய இவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சிவகுமார், மனைவி ரம்யா மற்றும் குழந்தை சாய் ஆகியோர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கருத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.