தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அவருடைய வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் என எந்த வங்கியில் வேண்டுமானாலும் பொதுமக்கள் தங்களுடைய நகைகளை 5 பவுன் வரை அடமானம் வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே அவை தள்ளுபடி செய்யப்படும் என்று மேடையில் பேசி மக்களை நகைக்கடன் வாங்க தூண்டி ஆட்சியை பிடித்தனர். மேலும் 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இருந்தே பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் நகை கடன் தள்ளுபடி என பெயரளவில் ஒரு அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி பற்றி அதில் எந்த விவரமும் இல்லை.
மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களிடம் பயிர்க் கடன் வழங்குவதற்கு தேவையான நிதி இல்லாததால், விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இதையடுத்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் உட்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் நகை கடன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.