டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .
டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழந்து திணறியது .குறிப்பாக அணியில் ஜார்ஜ் முன்சி, மைக்கேல் லீஸ்க் ஆகிய இருவரைத் தவிர மற்ற வீரர்கள் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை .இந்திய அணி சார்பில் ஜடேஜா ,முகமது ஷமி தலா 3 விக்கெட்டும் , பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினர் .
இறுதியாக ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 85 ரன்னில் சுருண்டது. இதன் பிறகு 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா -கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 30 ரன்னில் ஆட்டமிழக்க ,அதிரடியாக விளையாடிய ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியாக இந்திய அணி 6.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.