தமிழக அரசு ஒரு ஹிந்து விரோத அரசு எனவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைத்து கோவில்கள் முன்பும் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்து பேசியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஹெச். ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறும் ஓநாய் கூட்டத்தை ஊராட்சி அரசு என்று கூறினால் தான் புரியும் என்று விமர்சித்தார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி தமிழக அரசு நடந்து கொள்ளவில்லை எனவும் கோவில்களை அபகரிக்கும் முயற்சியை தான் அரசு மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
அறநிலையத்துறை அமைச்சருக்கு அவரது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை கூட முழுமையாக தெரியவில்லை எனக் கூறிய ஹெச். ராஜா கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்குவதிலேயே அவர் குறிக்கோளாக உள்ளார் எனவும் சாடினார். மேலும் ஒவ்வொரு கோவிலின் முன்பாக அறநிலையத்துறை அமைச்சர் மண்டியிட்டு தோப்பு கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை கோவில்களை எடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.