திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக விசிக. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல் எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.ஆர் சற்குணம் மற்றும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாகவும், அங்கே நடக்கும் விவரங்களை அறிந்து கொள்வதற்காக திரிபுராவிற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்களை, வழக்கறிஞர்களை, கைது செய்து இருப்பதை விசிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளில் குறவர்களை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது என்றும் உரிய புலனாய்வு இல்லாமல் அந்த மக்களை கைது செய்வதை தவிர்க்க உரிய செயல் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.