ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலமாக கஞ்சா கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இன்ஜினுக்கு அருகாமையில் இருக்கும் பெட்டியில் காவல்துறையினர் ஏறி சென்று சோதனை செய்ததில் இருக்கைக்கு அடிப்புறத்தில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அந்தப் பெட்டியில் பயணம் செய்த ரயில் பயணிகளிடம் விசாரணை நடத்திய போது இருக்கையில் அமர்ந்திருந்த மர்மநபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி சென்று விட்டதாக கூறியுள்ளனர். மேலும் பறிமுதல் செய்த கஞ்சாவை காவல்துறையினர் வேலூர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.