நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் அதிகமாக படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவ.7ஆம் தேதி கணித ஆசிரியர் சுரேஷ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, மாணவிகளை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கடிதம் வாயிலாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு புகாரளித்திருந்தனர்.இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சம்மந்தப்பட்ட ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதேநாளில் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் 7 நாட்களுக்கு பிறகு ஆசிரியர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் சுரேஷ் தலைமறைவாக உள்ளதால், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.