வடகொரியா மீதுள்ள முக்கிய பொருளாதாரத்தின் தடைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று சீனா மற்றும் ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றது.
வடகொரியா முதன் முதலாக 2006-ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனையினை நடத்தியபோது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அந்நாட்டின் மீது முதலில் பொருளாதார தடை விதித்தது. இதனையடுத்து தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோதும் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோதும் பொருளாதார தடைகளை மென்மேலும் இறுக்கியது. இதனால் வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இதற்கிடையில் மற்றொரு புறம் கொரோனா தொற்று பரவலை தடுக்க அந்நாடு தனது எல்லைகளை மூடி வைத்து இருப்பதால் உணவுப்பொருட்கள் விநியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது.
இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டுமென அந்நாட்டு தலைவரான கிம் ஜாங் அன் உத்தரவிட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று பொருளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் கூட்டாக குரல் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு வரைவுத் தீர்மானத்தை தயார் செய்து அதை உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முக்கிய பொருளாதார தடைகள் விலக்கப்பட்டால் வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், ஜவுளி ஏற்றுமதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் அந்நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.