சென்னையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட 51 பேருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்தும் புத்தாடைகள் அணிந்தும் பொதுமக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் காரணமாக காயமடைந்தவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 45 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டும் அமைக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் மொத்தம் 51 பேர் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னையில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் லேசான காயங்களுடனும் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையை பொறுத்தவரை பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.