தமிழகத்தில் மழைகாலத்தில் ஏற்படும் முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா நடிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க அதிமுக போராட்டம் நடத்தப்படும் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பெரியாறு அணைக்கு செல்லவில்லை என்பதால் இதுகுறித்து அவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை என்றார். ஆனால் தனது 80 வயதிலும் முல்லை பெரியார் அணையை நேரில் பார்வையிட வந்துள்ளேன் என்றார். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவின்படி ‘ரூள்கர்வ்’ முறைப்படி நவம்பர் 10ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 139.50 அடி மற்றும் நவம்பர் 30 ஆம் தேதியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்.
அதனை தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போது கேரள அரசு வனத்துறையை காரணம் காட்டி அனுமதி அளிக்கவில்லை. இதனால் விரைவில் பேபி அணையைப் பலப்படுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.