வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருபத்தி ஒரு அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று அறுபத்தி 66 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேலாக நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேனி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு முதற் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் உயர்வதை பொருத்து அடுத்தகட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்து விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.