மதுரை மாவட்டம் திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளியான அப்துல் சமது (37) இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு அரப்புஸ்ரா (9) என்ற பெண் குழந்தையும், அகமது (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.அப்துல் சரிவர வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவ்வப்போது அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மும்தாஜ் தன் தாய்வீட்டிற்குச் சென்றதும், பின்னர் மீண்டும் சமாதானம்பேசி அழைத்துச் செல்வதை அப்துல் வழக்கமாகக் கொண்டவர்.
கடந்த மாதம் நடைபெற்ற குடும்பச் சண்டையில் அப்துல், மும்தாஜை கொடூரமாக தாக்கியதால் மும்தாஜின் பெற்றோர் மகளைக் காப்பாற்ற வேறொரு தெருவிலுள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றவிட்டனர்.தாயுடன் குழந்தைகளை அனுப்ப அப்துல் மறுப்புதெரிவித்து தன்னுடனே வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமி அரப்புஸ்ரா நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு தனது தாய் மும்தாஜை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்துல் சிறுமியிடம் தாயை எதற்காக பார்க்கச் சென்றாய்? எனவும் அவரது அம்மா இருக்குமிடத்தை கேட்டும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
வலி தாங்காத சிறுமி அலறித்துடித்து வீட்டிற்குவெளியே ஓடிவர முயன்றுள்ளார். ஆனாலும் பின்னால் துரத்திவந்த அப்துல், சிறுமியை அடித்து கீழே தள்ளி கழுத்தில் மிதித்தும், பின்னர் டியூப் லைட்டால் கொடூரமாகவும் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் அனைத்தும் அப்பகுதியிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.குழந்தையைக் காப்பாற்ற சென்றவர்களையும் அப்துல் அடிக்கச்சென்றதால் யாரும் குழந்தையை காப்பாற்றச் செல்லவில்லை. சிறிது நேரத்தில் குழந்தை தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளாத அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்துலை தாக்கவே அங்கிருந்து அவர் ஓடிவிட்டார்.
இந்நிலையில், சிசிடிவி ஆதாரத்தை வைத்து திருமங்கலம் காவல்நிலையத்தில் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அப்துல் சமதுவை தேடிவருகின்றனர்.
உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் பெற்றதாயை பார்க்கச்சென்ற சிறுமியை தந்தையே கொடூரமாக தாக்கிய இச்சம்பவம் குழந்தைகளுக்கு நாட்டில் மட்டும் அல்ல வீட்டிலும் சரியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.