Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதே ஊர்…. அதே இடம்…. அதே துயரம்…. தொடரும் கந்துவட்டி கொடூரம் ….!!

கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மூன்று குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நெல்லை மேல கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். பெயின்டரான இவர் தொழில் செய்வதற்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் பத்து பைசா வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.நான்கு வருடங்களாக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேலாக அவர் வட்டிக் கட்டி வந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் வட்டிக் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் அருள்தாஸ் வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் அசலும், வட்டியும் என ஒரு லட்சம் ரூபாய் கட்டக் கோரி வலுக்கட்டாயப்படுத்தியதோடு, அவரைக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் மன உளைச்சல் ஏற்பட்ட அருள்தாஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் முறையிட வந்துள்ளார்.அங்கு அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு காவலர்கள், அவர்கள் உடல் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றியுள்ளனர்.

இதற்கிடையில் அருள்தாஸ் மண்ணெண்ணெயைக் குடித்ததால் ஆம்புலன்ஸ் மூலம், அவர்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பத்துடன் ஐந்து பேர் தீக்குளிக்க முயன்றது ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்கு பேர் கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |