தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், அதன் எதிரொலியாக இன்று முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒன்பதாம் தேதி வரை கனமழை தொடரும் என்றும், கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.