தீவிரவாத அமைப்பினருக்கு கனடாவில் இருந்து நிதி வழங்கப்படுகிறதா என்று தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலக நாடுகளில் சீக்கியர்கள் அதிகமாக வாழ்கின்றனர். அதே போன்று கனடாவிலும் சீக்கியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள நீதிக்கான சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் ஆதரவு பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, காலிஸ்தான் புலிப்படை போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு கனடாவில் இருந்து நிதி வருகின்றதா என்று என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக முதலில் என்.ஐ.ஏ.அமைப்பின் ஐ.ஜி. தலைமையிலான குழுவினர் கனடா சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் அங்குள்ள ஆர்.சி.எம்.பி என்ற போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இது பற்றி கனடாவில் உள்ள இந்திய தூதரான அஜய் பிசாரியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்தியா, கனடா இடையேயான மூலோபாய கூட்டு, தீவிரவாதம், குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தியதில் நல்லதொரு பங்களிப்பை தந்தனர். மேலும் இந்தியாவும் கனடாவும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஆர்.சி.எம்.பி. மற்றும் என்.ஐ.ஏ. இணைந்து செயல்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.