டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது .இதில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன .இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .ஏனெனில் இப்போட்டியின் முடிவுதான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்க கூடியதாக அமைந்துள்ளது. இதில் நியூசிலாந்து அணி 3 வெற்றி , ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது .எனவே இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும் .அதேசமயம் நியூசிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் .
அதாவது இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம். இதனால் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டுமென இந்திய ரசிகர்கள் வேண்டுதலுடன் காத்திருக்கின்றனர் .நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் ,பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. குறிப்பாக சுழற்பந்து வீச்சு அணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனிடையே காயம் காரணமாக அணியில் முஜீப் ரகுமான் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்டினால் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு சவால் அளிக்க முடியும் என்பது சந்தேகமில்லை. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார் என்று ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இந்திய நேரப்படி போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.