தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது முதற்கட்டமாக 500 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1,590 கன அடியாக உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.