தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேது ராமவர்மா அறிவித்துள்ளார். அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.