தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் சீனி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிகுமார் மருதபுரத்திலிருந்து கால்கரை செல்லும் வழியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீனிகுமாரை அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சுடலையாண்டி கத்தியால் குத்தி கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுடலையாண்டியை கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுடலையாண்டி காவல்துறையினரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் சீனி குமார் என்னிடம் அடிக்கடி மது வாங்கி தருமாறு கூறி மிரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெத்தரங்கபுரம் பகுதியில் உள்ள சினிகுமாரின் மகளை பார்ப்பதற்காக முருகேசன் என்பவரது ஆட்டோவில் நானும், சீனிகுமாரும் புறப்பட்டுச் சென்றோம். அப்போது மது போதையில் எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தில் சீனிகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் சுடலையாண்டி கூறியுள்ளார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த முருகேசனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.