வராக நதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடலை மீட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள மேல்மங்கலம் அக்ரஹாரம் பகுதியில் வித்யபாரதி வேதபாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் மதுரையை சேர்ந்த சுந்தர நாராயணன், சென்னையை சேர்ந்த மணிகண்டன், ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் உள்ள வராக நதியில் ஓடிக்கொண்டிருந்த வெள்ளத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் மாணவர்கள் 4 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஐயப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகிய 2 பேரையும் மட்டும் மீட்ட நிலையில் மற்ற இரண்டு பேரையும் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுந்தர நாராயணன் மற்றும் மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 2வது நாளாக நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று ஆற்றின் கரையோரம் மிதந்துகொண்டிருந்த சுந்தர நாராயணனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் மாணவரின் உடலை தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து மணிகண்டனை தேடி வரும் நிலையில் ஜெயமங்களம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.