நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரத்தில் லாரி ஓட்டுநரான கபாலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் பண்ணையார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்த பகுதியிலுள்ள டாஸ்மார்க்கில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது தேர்தல் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு வாக்குவாதமாக மாறி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பண்ணையார் அங்கு கிடந்த கம்பை எடுத்து கபாலியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த கபாலியை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் பண்ணையார் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.