திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 கிலோ மல்லிகை பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்வதால் பூக்கள் செடி களிலேயே அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 10 தினங்களுக்கும் முன்பு 1 கிலோ மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும் குறைவாக விற்ற நிலையில் தற்போது 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 500 ரூபாய்க்கு விற்பனையான முல்லைப் பூ தற்போது 1,000 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மாலை கட்ட பயன்படும் சம்பங்கி பூ 60 ரூபாய்க்கும், செண்டு மல்லி பூ 50 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை பூ 25 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 70 ரூபாய்க்கும், விற்பனையாகி வருகின்றது.
இந்த விலை ஏற்றம் தொடர்ந்து கல்யாண முகூர்த்த நாட்கள் வருவதால் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், கூடுவதற்கு தான் வாய்ப்பு உள்ளது என்றும், திண்டுக்கல் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லா பூக்களின் விலையும் கூடியுள்ளது மல்லிகை பூ இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கும் முல்லைப் பூ 1500 ரூபாய்க்கும், ஜாதி பூ 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,000 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 70 ரூபாய்க்கும், செண்டுமல்லி 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரும்புகள் அனைத்தும் கொட்டி போய்விடுகிறது. அதனால் பூ வரத்து குறைந்துள்ளது. மேலும் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் பூ விலைகள் கூடுதலாக இருக்கிறது. 5 டன் வந்த இடத்தில் 1 டன் வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.