அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக மூன்று நாடுகள் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து ஈரான் மீது படிப்படியாக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனையடுத்து ஈரானும் தன் பங்களிப்பாக படிப்படியாகவும் வெளிப்படையாகவும் அணுசக்தி வரம்புகளை கைவிட்டுவிட்டது.
தற்பொழுது ஈரானின் 20% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பாக 210 கிலோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஒப்பந்தத்தின்படி 3.67%க்கு மேல் செறிவூட்டக் கூடாது. இதற்கிடையில் பல மாத விவாதங்களுக்கு பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதி வியன்னாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் தனது வருடாந்திர போர் பயிற்சியை துவங்கியுள்ளது. இந்த பயிற்சியானது ஓமன் வளைகுடாவின் கடற்கரை பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கில் 10,00,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நடக்கிறது என்று அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் கடற்படை, விமானப்படை, இராணுவம் ஆகிய முப்படைகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், இராணுவ போக்குவரத்து விமானம், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பயிற்சியானது எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.