சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. விடிந்த பிறகும் சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி புறநகர் மற்றும் தாம்பரம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்வதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனால் புழல் ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக 250 கன அடி என மொத்தம் 500 கன அடி நீர் இன்று காலை 11 மணிக்கு திறந்து விடப்பட்டது. தற்சமயம் மேலும் 250 கன அடி அதிகரித்து மொத்தமாக 250 கன அடி நீர் வெளியிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர்நிலைகள் அருகே தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.