தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகின்ற 11ம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதனால் பொதுமக்கள் அடுத்த 5 நாட்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தியுள்ளது.