தீபாவளி விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பணிக்கு செல்ல தொடங்கியதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்களுக்கு வந்தனர். இதற்காக தமிழக அரசு சார்பாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ரயில்கள் மூலமும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனையடுத்து தங்கள் சொந்த ஊரில் தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்தனர்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதற்காக அவர்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு கார்கள், பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாக திரும்பினர். இதில் பெரும்பாலான பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருப்பூர், பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரும்பினர். இவ்வாறு பேருந்துகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் பயணம் மேற்கொண்டனர்.
இதேபோன்று தர்மபுரி, மொரப்பூர், பொம்மிடி, பாலக்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு வாகனத்தில் அவரவர்கள் வேலை பார்க்கும் ஊருக்கு சென்றதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் தொப்பூர் சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.