அடர்ந்த வனப்பகுதியில் செல்லும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகனங்கள் அதில் சிக்கிக் கொண்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா கிராமம் இருக்கின்றது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான சாலையில் 25 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மழை நீர் கலந்ததால் ஆறு செந்நிறமாக மாறி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக அந்த ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா கிராமத்துக்கு தக்காளி பாரம் ஏற்றுவதற்காக சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேன் மாயாற்றை கடக்க முயன்றபோது வெள்ளம் இழுத்துச் சென்றது. இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் லாவகமாக வாகனத்தை இயக்கி கரை சேர்த்தார். மேலும் சரக்கு வேனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கார் மற்றும் மற்றொரு சரக்கு வேனையும் வெள்ளம் இழுத்தது. இதன் காரணமாக அந்த வாகனங்கள் கரையோரம் ஆற்று புதை மணலில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் நின்று விட்டது.
இதனை பார்த்து கரையோரம் நின்று இருந்த தெங்குமரஹாடா கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்த வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மணலில் சிக்கிய வாகனங்களை இழுத்து அவர்கள் மீட்டனர். இதுபோன்று வருடந்தோறும் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மாயாற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதும் தொடர் கதையாக இருக்கின்றது. ஆகவே மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டுமென்று தெங்குமரஹாடா கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.