கேரள அரசின் அனுமதி கிடைக்காததால் முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தேக்கடி பகுதிக்கு தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் இருந்து சென்றுவர பொதுப்பணித்துறைக்கு கண்ணகி, ஜல ரத்னா என்ற 2 படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித் துறையினர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்டீல் படகு ஒன்றை வாங்கி அதற்கு தமிழன்னை என பெயரிட்டு முல்லைப் பெரியாறு அணையில் பயன்பாட்டிற்காக நிறுத்தி வைத்தனர். இந்தப் படகு வாங்கப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்த நிலையில் இன்னும் பயன்படுத்தப்படாமல் தேக்கடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எச்.பி திறனைக் கொண்டுள்ளதால் அனுமதி செய்ய முடியாது என கேரள அரசு மறுத்துவிட்டது. ஆனால் தமிழக அரசு இந்த படகால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இருப்பினும் கேரள அரசின் அனுமதி கிடைக்காமல் இந்த படகு வெறும் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அணை குறித்த ஆய்வுக்கு வந்த அமைச்சர் துரைமுருகனிடம் படகு குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்களுக்கு சரியான பதில் அளிக்காமல் அமைச்சர் சென்றுள்ளார்.மேலும் இந்த படகை இயக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலர் கேட்டுக் கொண்டனர்.